
''திண்டுக்கல் தந்த திருப்புமுனை!''
தமிழகத்தில் கால்பதித்த ஜீரோ பட்ஜெட்
''உலக வரலாற்றையே கி.மு., கி.பி. என்று பிரித்துப் பார்க்கும் அளவுக்கு ஒரு முக்கியமான நிகழ்வு ஏசு கிறிஸ்துவின் பிறப்பு. அதேபோல, தமிழ்நாட்டு விவசாய வரலாற்றை தி.மு., தி.பி. என்று பிரித்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது திண்டுக்கல்லில் 'பசுமை விகடன்' நடத்திய 'ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பு'. என்னுடைய தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான மாற்றங்களே இதற்கு சாட்சி...!'' -இப்படி மாய்ந்து மாய்ந்து பேசுகிறார் அனந்தகிருஷ்ணன்.
சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 100- வது கிலோ மீட்டரில் இருக்கிறது தொழுப்பேடு. இங்கிருந்து வலது பக்கமாக விலகி ஆறு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கண்முன்னே விரிகிறது சின்னஞ்சிறு கிராமமான சிறுபேர்பாண்டி. ஏக்கர் கணக்கில் பரந்து கிடக்கும் அந்தப் பண்ணையில் மாஞ்செடிகளுடன் சித்தகத்தி பூக்கள் காற்றில் ஆடியபடி வரவேற்க, அவற்றுக்கு இணையான உற்சாகத்தோடு வரவேற்று அமரச் சொன்ன அனந்தகிருஷ்ணன் (அலைபேசி: 98423-35700), மடை திறந்த வெள்ளமாக வார்த்தைகளை ஓடவிட்டார்.
‘‘புதுச்சேரி பக்கத்தில் உள்ள திருபுவனை கிராமம்தான் சொந்த ஊர். பரம்பரையாக விவசாய குடும்பம். ஆனால், விவசாயத்துக்கு உரிய மரியாதை இல்லாத சூழலில் நிலத்தை எல்லாம் விற்றுவிட்டு இறால் வளர்ப்பில் இறங்கினார் என்னுடைய அப்பா. நல்ல லாபம் கிடைத்தது. நானும் அதிலேயே இறங்கி சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால்... வயல், வரப்புகளை பார்க்கும்போதெல்லாம் நெஞ்சுக்குள் பெரிதாக ஏக்கமும், ஆசையும் அலைமோதிக்கொண்டே இருக்கும். அதுதான் இப்படியரு பண்ணையாக இங்கே விரிந்து கிடக்கிறது.
2004- ம் ஆண்டு இங்கே நிலத்தை வாங்கி விவசாய வேலைகளைத் தொடங்கினேன். மாமரங்களை நடவேண்டும் என்பதுதான் என் ஆசை. மண் வளம் எப்படி இருக்கிறது என்று பரிசோதனை செய்தேன். 'ஐந்து அடிக்கு கீழே சுண்ணாம்பு கற்கள் இருக்கின்றன. எனவே மா போன்ற சில பயிர்கள் வளராது' என்றார்கள்.
'தண்ணீர் எப்படி இருக்கிறது?' என்று ஆய்வுக்கு அனுப்பினேன். வந்த தகவல் மேலும் அதிர்ச்சியை தந்தது, 'உப்பு அதிகமாக இருக்கிறது. பயிர்கள் வளர்வது கொஞ்சம் கஷ்டம்தான்' என்றார்கள்.
இந்தச் சமயத்தில் இயற்கை விவசாயம் பற்றி நிறைய கேள்விப்பட ஆரம்பித்ததால், என்னுடைய நிலத்தின் தன்மை குறித்து, இயற்கை விவசாய வல்லுனர்களிடம் கருத்துக் கேட்டேன். 'கவலையை விடுங்கள். மண்ணில் சுண்ணாம்பு இருந்தாலும் மாமரம் சூப்பராக வளரும். தண்ணீர் பற்றிய கவலையையும் விட்டுத்தள்ளுங்கள்' என்று தெம்பு கொடுத்தார்கள்'' என்று முகம் மலரச் சொன்னவர், நம்மையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள் நடை போட்டபடியே தொடர்ந்தார்.
''இயற்கை முறை விவசாயம்தான் என்ற தெளிவான முடிவோடு களம் இறங்கினேன். என்னுடைய ஆசைப்படி மாமரங்களை நடவு செய்த நான்... நெல்லி, சப்போட்டா, சாத்துக்குடி என்று விதம்விதமாக மரங்களை நடவு செய்தேன். அவற்றுக்கு இயற்கை உரங்களைக் கொடுக்க ஆரம்பித்தேன். இயற்கை விவசாயம் குறித்து எந்தச் செய்தியைக் கேள்விப் பட்டாலும் உடனே அமல்படுத்திப் பார்த்துவிடுவேன். இயற்கை உரங்கள், பூச்சிவிரட்டிகள் என்று சொல் லப்பட்ட அனைத்தையும் தயாரித்து செடிகளுக்குத் தெளித்தேன். பழச்செடிகளும் பழுதில்லாமல் வளரத் தொடங்கின.
கையில் காசு இருக்கும் போதெல்லாம் இயற்கை இடுபொ ருட்களை கொடுத்துக்கொண்டே இருப்பேன். நான் செய்வது எல்லாம் சரியா... தவறா என்று சிந்தித்துப் பார்க்கவில்லை. ரசாயன உரங்களைப் போட்டி ருந்தால் நிச்சயமாக பழ மரங்கள் வளர்ந்திருக்காது என்பது தெரியும் என்பதால், எதைப்பற்றியும் யோசிக்காமல் இயற்கை உரங் களை முழுமையாக நம்பி செயல் பட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த நிலையில்தான், கடந்த 2006 ஜனவரி 'பசுமை விகடன்' இதழ் வெளியானது. வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம் பற்றிய கட்டுரைத் தொடர் தொடங்கியதும், அதை ஊன்றி படிக்கத் தொடங்கினேன். ஏற்கெனவே இயற்கை விவசாயத்தில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்தாலும் சுபாஷ் பாலேக்கர் சொல்லும் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையில் ஏதோ முக்கி யமான விஷயம் இருக்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். எப்போதுமே அதைப் பற்றிய சிந்தனைதான். இந்தச் சூழலில்தான் செப்டம்பர் 24, 25 தேதிகளில் திண்டுக்கல்லில் பயிற்சி வகுப்பு பற்றிய அறிவிப்பு பசுமை விகடனில் வெளியானது. அதில் கலந்து கொள்வது என்று தீர்மானித்த நான், உடனடியாக முன்பதிவு செய்தேன். ஆனால், மிகப் பெரிய மாற்றத்தோடு அங்கிருந்து ஊர் திரும்பப் போகிறேன் என்று கனவிலும் நினைக்கவில்லை'' என்று நெகிழ்ந்து போனவராகச் சொன்ன அனந்த கிருஷ்ணன், பண்ணையிலிருக்கும் மாட்டுக்கொட் டகை அருகில் போய் நின்றார்.
''திண்டுக்கல்லில் இருந்த இரண்டு நாட்களும் என் மனதில் மண்டிக்கிடந்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ஊர் திரும்பிய மறுநாளே, பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் முறை களை என்னுடைய தோட்டத்தில் அமல்படுத்த ஆரம்பித்தேன். 'வெளிநாட்டு மாடுகள் எல்லாம் மாடு வடிவில் உள்ள விலங்கு. அவற்றால் நம் நிலத்துக்கு எந்த லாபமும் இல்லை' என்று பாலேக்கர் சொன்னதை ஆழமாக யோசித்தேன். மொத்தம் 33 மாடுகள் என்னிடம் இருந்தன. அதில் 17 மாடுகள் வெளிநாட்டைச் சேர்ந்த உயர்ஜாதி மாடுகள். அவற்றின் விலையும் அதிகம். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் வந்த விலைக்கு உடனடியாக விற்று விட்டேன். இப்போது என்னிடம் இருப்பவை அத்தனையும் நம்நாட்டு மாடுகள்தான்'' என்றவர், அடுத்ததாக இருந்த கொட்டகைக்கு அழைத்துச் சென்றார்.
''இது மண்புழு உர உற்பத்திக்கூடம். முதல் வேலையாக மாடுகளை விற்ற நான், இரண்டாவதாக செய்தது... மண்புழு உரம் தயாரிப்பதற்காக ஆயிரக் கணக்கில் செலவு செய்து கட்டிக்கொண்டிருந்த கொட்டகை வேலையை பாதியில் நிறுத்தியதுதான். பண்ணையில் 33 மாடுகளை நான் வளர்த்து வந்தது பாலுக்காக அல்ல, சாணத்துக்காகத்தான். அந்தச் சாணத்தைக் கொண்டு மாதம் தோறும் ஆறு டன் மண் புழு உரம் தயாரித்து வந்தேன். 'இப்படி உரம் தயாரிப்பது வீணான வேலை. அதிலும் 'ஐசெனியா' என்ற மண்புழுவை வளர்த்தால், உங்கள் நிலத்தில் நச்சுப் பொருட்களை அவை கக்கும். அது மண்புழு அல்ல. புழுவடிவில் உள்ள காளி!' என்று திண்டுக் கல்லில் பாலேக்கர் சொன்னது மற்ற எல்லோரைக் காட்டிலும் எனக்குத்தான் தூக்கிவாரிப் போட்டது. ஏற்கெனவே நாம் தயாரித்து வைத்திருக்கும் மண்புழு உரம் டன் கணக்கில் ஒரு பக்கம் குவிந்து கிடக்கிறது; மற்றொரு பக்கம் லட்சக்கணக்கில் மண்புழுக்கள் வளர்ந்து கிடக்கின்றன. அவற்றை யெல்லாம் என்ன செய்வது?' என்று அங்கேயே யோசனை ஓட ஆரம்பித்து விட்டது.
ஊர் திரும்பியதும் அவற்றையெல்லாம் ஓரங் கட்டிய நான், 'வேண்டாம் என்று நாமே ஒதுக்கி விட்டோம். அதை மற்றவர்கள் தலையில் கட்டுவது எந்த வகையிலும் நியாயமில்லாத செயல்' என்றபடி சும்மா போட்டு வைத்திருக்கிறேன்'' என்றார் உதட்டைப் பிதுக்கியபடி.
மண்புழு உரம் தயாரிப்பதற்காக போடப்பட்ட கொட்டகைகளில் இப்போது கன ஜீவாமிர்தம், ஜீவாமிர்தம் எல்லாம் தயாராகிக் கொண்டி ருக்கின்றன.
தொடர்ந்து பேசிய அனந்தகிருஷ்ணன், ‘‘ஜீவாமிர் தத்தின் அண்ணனான அமிர்தகரைசலை ஏற்கெனவே தயாரித்திருக்கிறேன். அதனால் ஜீவாமிர்தம் தயாரிப்பது சுலபமாகவே இருக்கிறது.
இந்த நிலத்தில் என்னை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருந்த விஷயம்... தண்ணீர். கொஞ்சம் வறட்சி ஏற்பட்டாலும் தண்ணீருக்கு மிகவும் சிரமப் படவேண்டும். இனி அந்தக் கவலையும் இல்லை'' என்றபடியே கேக் வெட்டியது போல, நீளம் நீளமாக கச்சிதமாக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்களைக் காட்டி,
‘‘இதுவும் பாலேக்கர் சொன்னதுதான். இரண்டு வரிசை மாமரங்களுக்கு இடையில் இரண்டு அடி ஆழத்தில் வாய்க்கால் எடுத்திருக்கிறேன். நேற்று முன் தினம் பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது பாருங்கள். முன்பெல்லாம் மழைபெய்தால் மட, மடவென எல்லா நீரும் ஓடிவிடும். இப்போது தேங்கி இருக்கும் மழைநீரைப் பார்க்கும்பொழுது உடம்பில் புதுத்தெம்பு வருகிறது. இந்த சிறுவாய்க்கால்களின் தூரம் மட்டும் 70 கி.மீ. ஜீவாமிர்தத்தை சொட்டுநீர் பாசனத்தில் கலந்து விடுவதற்காக புதிய தொட்டி யைக் கட்டியிருக்கிறேன். ஜீவாமிர்தம் தெளித்தவுடன் மாமரங்கள் செழிப்பாக இருக்கின்றன. பூக்கத் தொடங்கிவிட்டன. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் முதல் மகசூலை சீக்கிரமே பார்க்கப் போகிறேன். இந்தப்பண்ணையில் நான் செய்திருக்கும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின்னணியில் நிற்பது இரண்டே இரண்டுதான். ஒன்று பசுமை விகடன், மற்றது ஜீரோ பட்ஜெட்!
ஆரம்பத்தில் அரை ஏக்கரிலும் ஒரு ஏக்கரிலும் தான் தன்னுடைய தொழில்நுட்பத்தை பரிசோதனை அடிப்படையில் செய்து பார்க்கச் சொன்னார் பாலேக்கர். ஆனால், நான் என்னிடம் இருக்கும் அத்தனை ஏக்கர் நிலத்திலும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட் டேன். 'பாலேக்கர் பல ஆண்டுகள் ஆய்வு செய்து இந்தத் தொழில்நுட்பங்களை சொல்கிறார். அப்படி யிருக்கும்போது அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று நாம் வேறு எதற்காக சோதனை செய்து கொண்டி ருக்க வேண்டும்' என்றுதான் ஒட்டு மொத்தமாக ஜீரோ பட்ஜெட்டுக்கு மாற்றி விட்டேன். இப்போது என் சிந்தனை முழுவதும் ஜீரோபட்ஜெட் மீதுதான்.
பாலேக்கர் ஏராளமான விஷயங்களை சொல்லியுள் ளார். அதை ஒவ்வொன்றாக செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். சரியான தொழில்நுட்பத்தை கையில் எடுத்தால் மற்றதொழிலைப்போல் விவசாயத் திலும் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போகிறேன்’’ என்று உறுதிபொங்கச் சொன்னார் அனந்தகிருஷ்ணன்.
எனக்காகவே அவர் சொன்னார்!
திண்டுக்கல் பயிற்சி வகுப்பில் பேசும்போது 'ரசாயன விவசாயத்தைக் காட்டிலும் ஆர்கானிக் விவசாயம் செலவு பிடிக்கக் கூடியது' என்று சொல்லியிருந்தார் பாலேக்கர். அதைப்பற்றிக் குறிப்பிட்ட அனந்தகிருஷ்ணன், ''எனக்காகவே அவர் அதைச் சொன்னது போல உணர்ந்தேன். இயற்கை இடுபொருட்கள் என்று இத்தனை நாட்களாக நான் கொடுத்து வந்தவற்றை எல்லாம் கணக்குப் போட்டுப்பார்த்தேன். பாலேக்கர் சொன்னது சரிதான் என்பது புரிந்தது. மாதம்தோறும் அந்த இயற்கை இடுப்பொருட்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்துவந்தேன். ஆனால், இப்போது இரண்டு மாத காலமாக பாக்கெட்டில் பணம் தங்கி இருக்கிறது. செலவு என்று பார்த்தால் வெல்லம் வாங்குவது மட்டும்தான். அதையும் மூட்டைக் கணக்கில் குறைந்த விலைக்கு வாங்கி வந்து அடுக்கிவிட்டேன்'' என்று சிரித்தபடியே சொன்னார்.
உயிர் மூடாக்கு!
''மரங்களுக்கு இடையில் கால்வாய் எடுத்ததின் மூலம், அருகிலேயே மேடாகக் கிடக்கும் மண்ணில் சணப்பு, தக்கை, உளுந்து, தட்டைப்பயறு, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, எள், கொள், ஆமணக்கு, சித்தகத்தி போன்ற விதைகளை விதைத்தி ருக்கிறேன். ஏக்கருக்கு 22 கிலோ என்ற அளவில் விதைத்திருக்கிறேன். இந்தப் பயிர்கள் எல்லாம் உயிர் மூடாக்காக நிலத்துக்குப் பயன்படும். இவை காய்த்த பின்பு விதைகளை எடுத்துக் கொண்டு செடிகளை வாய்க்காலில் போட்டுவிடுவேன். அவை மட்கி உரமாகவும் மாறும். பயறு வகைச் செடிகளை வளர்ப்பதால், காற்றில் உள்ள தழைச்சத்தை அவை மண்ணில் சேர்க்கின்றன. இதனால் மண்வளம் கூடும். களை எடுக்க வேண்டிய வேலையும் மிச்சமாகிறது.
வழக்கமாக மரங்களுக்கு அருகில் சொட்டுநீர் பாசனம் செய்வதை தவிர்த்து, இரு மர வரிசைக்கு நடுவில் வெட்டப்பட்டிருக்கும் சிறுவாய்க்கால்களில் செய்தாலே போதும். மரத்தின் வேர்கள் அதை இழுத்துக்கொள்ளும். இதனால் நீரின் பயன்பாடு வெகுவாக குறைகிறது. சூரிய ஒளி மூலம் நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது (அறுவடை செய்து போட்ட பயறு வகை செடிகள் அதைத் தடுக்கும்)'' என்று இரண்டு, மூன்று மாங்காய்களை அடித்தார் அனந்தகிருஷ்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக